தமிழகத்தில் ஒரு காலத்தில் பள்ளிக்கு சென்று படிப்பதற்கு பிள்ளைகளே இல்லாமல் இருந்தனர். ஆனால் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் இதனை கருத்தில் கொண்டு ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதாவது பள்ளிகளில் மதிய உணவு திட்டம் என்பது அவர் கொண்டு வந்தது தான்.
அதன் பிறகு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அந்தத் திட்டத்தை விரிவு படுத்தினார். இன்றளவும் அந்த திட்டம் மாணவர்களிடையேயும், பெற்றோர்கள் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதேபோல ஒரு திட்டத்தை தற்போது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி இருக்கிறார். அதாவது, பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே காலை உணவு திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது இது எந்த அளவிற்கு மாணவர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரியவில்லை.
ஆனால் இதனை விரிவு செய்ய தமிழக அரசு தற்போது அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் காலை உணவு திட்டத்தை ரூபாய் 404 கோடி விரிவாக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது.
முதல்வரின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்ததன் மூலமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் 31,008 அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படிக்கும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.