fbpx

கோப்புகளை விரைவாக பரிசீலிக்க வேண்டும்…! தமிழக ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்…!

ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைவாக பரிசீலித்து, அவர்கள் முன் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் சிறைவாசிகளின் முன்விடுதலை தொடர்பாக சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களுடைய 113-வது பிறந்தநாளினை முன்னிட்டு நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் தண்டனையை, நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில், முன்விடுதலை செய்ய இந்த அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும், என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 13.09.2021 அன்று தமிழ்நாடு சட்ட பேரவையில் அறிவித்திருந்தார்கள்.

அதற்கேற்ப உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டு 556 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு 08.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 8 நேர்வுகள், தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் நிராகரிக்கப் பட்டதால், அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 223 சிறைவாசிகளின் நேர்வுகள் ஆளுநர் அவர்களின் ஒப்புதலின்றி திருப்பி அனுப்பப்பட்டு, அரசின் மறுபரிசீலனையில் இருந்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டு சிறைவாசிகளில் 10/20 ஆண்டுகள் தண்டனை முடித்தும் பயன்பெற முடியாத ஆயுள் தண்டனை சிறைவாசிகள் மற்றும் வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணைநோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள், தீராத நோயுற்ற மற்றும் மனநலம் குன்றிய சிறைவாசிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாக, மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் திரு.என்.ஆதிநாதன் அவர்களின் தலைமையின் கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு, அரசாணை (நிலை) எண்.589, உள் (சிறை-4) துறை நாள் 22.12.2021ல் அரசால், அமைக்கப்பட்டது. அக்குழு தனது அறிக்கையை 28.10.2022 அன்று அரசுக்கு சமர்பித்தது. அந்த அறிக்கையில், 264 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் குழுவால் முன்விடுதலைக்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தற்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்த நாளினை முன்னிட்டு, ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்வதற்கு, அரசாணை எண்.430, உள்துறை, நாள் 11.08.2023ன்படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதற்கட்டமாக, தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலைக்காக அரசால் பரிந்துரை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24.8.2023 அன்று மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மாண்புமிகு ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், மேற்கண்ட சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு மாநில சட்ட மன்றப் பேரவை விவாதத்தின்போது, உறுப்பினர்கள் சிலர் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட நெடுநாள் சிறைவாசத்தில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்வது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து, அவர்கள் அனைவரையும் சட்ட விதிகளுக்குட்பட்டு விரைவில் விடுதலை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களின் கோரிக்கைகள் கவனத்துடன் பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.

நெடுநாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகளை, மனிதாபிமான அடிப்படையில் சட்ட விதிகளுக்குட்பட்டு, முன்விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்தும், அரசுக்கு தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது. எனவே, தங்களுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகளை விரைவாக பரிசீலித்து, இந்திய அரசமைப்பின் உறுப்பு 161 இன் கீழ் முன் விடுதலை செய்ய ஒப்புதல் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இவர்கள் எல்லாம் ரேஷன் அரிசியை பயன்படுத்தக் கூடாது!!! புதிதாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..

Wed Oct 11 , 2023
எவ்வளவு தான் நாகரீகம் வளர்ந்தாலும், வாழ்க்கை தரம் உயர்ந்தாலும் இன்னும் பலரின் வாழ்க்கை நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருள்களை நம்பி தான் உள்ளது. நாடு முழுவதும் புழுங்கல் அரசி, பச்சரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. இப்படி ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருள்களை வைத்து வாழ்க்கை நடத்தும் குடும்பங்கள் பல இன்றும் உள்ளது. தற்போது உள்ள காலகட்டத்தில், கண்டதை சாப்பிட்டு உடலுக்கு […]

You May Like