தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், தோல்வி பயம் காரணமாக 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை ஆவடி பாரதி நகரில் வசித்து வருபவர் கனகராஜ் மகன் தேவா (17). இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல், சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி மாணவி தாருண்யா பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதேபோல், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் மாணவி ரமணி. இவர் ஏற்கனவே கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித்தேர்வராக எழுதினார். இதில் மீண்டும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த மாணவி ரமணி, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதேபோல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் மாணவி அருந்ததி. 600-க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில், 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார். இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை நாராயண குப்பம் கிராமத்தில் வசித்து வந்த 17 வயது ஹரி என்ற மாணவன், நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்ட ஹரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரியகுளம் மாணவி தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 17 வயது சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர். இவர் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.