சேலம் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிஷான் நிதி உதவி பெறும் விவசாயிகள் ஆதார் எண்ணுடன் செல்போன் எண்ணை இணைக்க அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், தனது செய்தி குறிப்பில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டொன்டிற்கு ரூ.6,000, வழங்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் 3 தவணையாக ரூ.2,000/- வீதம் இந்த நிதி உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் பி.எம்.கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை இணைப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளதால் விவசாயிகள் அவர்கள் பகுதிக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்களை அணுகி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை உடனடியாக இணைத்து பயன்பெற வேண்டும். இந்த சேவைக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
இவ்வாறு ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்த பிறகு https/pmkisangov.inadharekycaspx என்ற இணையதளம் அல்லது பி.எம்.கிசான்செயலியில் ஆதார் எண்ணுடன் வரும் OTP அங்கீகாரத்தைப் பயன்படுத்தி ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 449 பயனாளிகள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டி இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இதற்காக சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையுடன் சேலம் அஞ்சல் கோட்டமும், அதன்கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியும் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..