Shafali verma: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய தொடக்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 292 ரன்களை பதிவு செய்தனர், இதன் மூலம் பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை ஷஃபாலி வர்மா படைத்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒரு நாள் போட்டி தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்திருந்தது. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று துவங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். துவக்கம் முதலே தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு இருவரும் கணிசமான ரன்களை குவித்தனர். ஷபாலி வர்மா 137 பந்துகளில், 23 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உட்பட 205 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆனார். இதன் மூலம் அதிவேக இரட்டை சதம் அடித்த முதல் டெஸ்ட் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார்.
மற்றொருபுறம் ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 26 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 149 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 55 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இன்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்துள்ள இந்திய அணி, 525 ரன்கள் குவித்துள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் 42 ரன்களுடனும், ரிச்சா கோஷ் 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் டெல்மீ டக்கர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
Readmore: ‘மூளையை உண்ணும் அமீபா’!. 12 வயது சிறுவனுக்கு பாசிட்டிவ்!. கேரளாவில் 3-வது வழக்கு உறுதி!