உத்திரபிரதேச மாநிலம் பாலியா பகுதியில் வரதட்சனை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதோடு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அதன் பிறகு எரித்து கொலை செய்த மாமனார் மற்றும் அவருடைய மகனும் அந்த பெண்ணின் கணவரும் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆனந்த் சவுபே என்பவரின் 22 வயது மனைவி வரதட்சணை கொடுமை காரணமாக, கொலை செய்யப்பட்டது குறித்து, சங்கர் தயாள் சவுபே மற்றும் அவரது மகன் ஆனந்த் சவுபே உள்ளிட்ட இருவரை கைது செய்திருப்பதாக பலியா காவல் நிலைய அதிகாரி முகமது உஸ்மான் தெரிவித்திருக்கிறார்.
காவல்துறையினர் தெரிவித்துள்ள தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட 2️ பேர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை 50,000 ரூபாய் வரதட்சனை மற்றும் தங்க சங்கிலிக்காக தொடர்ந்து, துன்புறுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த விதத்தில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய அந்த நபர்கள் அந்த பெண்ணை தீவைத்து எரித்திருக்கிறார்கள். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் பாதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். உயிரிழப்பதற்கு முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் நீதிபதியின் முன்பு தன்னுடைய வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார். அதில் அந்த பெண் எரிக்கப்படுவதற்கு முன்னதாக தன்னுடைய மாமனார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தி இருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த பெண் கடந்த 3ம் தேதி உயிரிழந்தார் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணின் கணவர் ஆனந்த் சவுபே மற்றும் மாமனார் சங்கர் தயாள் சவுபே உள்ளிட்ட இருவரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.