லோன் தொகையை வசூலிக்க சென்ற ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் அடித்துக் கொல்லப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அரியலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவா என்பவர், டொயோட்டா பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மகேஷ் என்பவர் தான் வாங்கியிருந்த காருக்கு தவணைத் தொகையாக ரூ.52,000 செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால், சிவா கடந்த 28ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி என்ற கிராமத்திற்கு பணம் வசூலிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சென்ற சிவா, அதன்பின் இரவு வீடு திரும்பவில்லை.
இதனால், பதறிப்போன குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவாவை தேடி வந்த நிலையில், கோடாலி கிராமத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அங்கு சென்று போலீசார் ஆய்வு செய்தபோது, சடலம் முழுவதுமாக எரிந்திருந்த நிலையில் கை, கால் உள்ளிட்ட சில பகுதிகள் மட்டும் தீக்கிரையாகாமல் இருந்துள்ளது.
இறந்தவரின் அடையாளம் தெரியாததால், கையில் அணிந்திருந்த மோதிரத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த மோதிரம் சிவா உடையது என்பது தெரியவந்தது. அதன்பின் நடத்திய தீவிர விசாரணையில், சிவா பணம் வசூலிக்கு வந்ததும், மகேஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, மகேஷிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “சம்பவத்தன்று சிவா, மகேஷ் வீட்டிற்கு வந்தபோது அவரின் மனைவி விமலா இருந்துள்ளார். அப்போது அவரது மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசி, திட்டியுள்ளார். பணம் கட்டினால் நான் ஏன் இப்படி பேச போறேன் என்றும் சிவா விதண்டாவாதம் செய்துள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த மகேஷ் அருகில் இருந்த பைப் ஒன்றை எடுத்து சிவாவை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்து சரிந்து விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகேஷ், சிவாவின் உடலை மறைத்து வைத்துள்ளார். பின்னர், இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம் பார்த்து, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் பனை மட்டைகளை வைத்து உடலை எரிந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், சிவாவின் பைக்கை ஃபைனான்சியர் சுரேஷ் என்பவரிடம் ரூ.15,000-க்கு விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளார்.
முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், மகேஷை போலீசார் கைது செய்திருக்கும் நிலையில், இந்த கொலையில் அவரது உறவினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.