ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல். பிரதமரின் தேசிய நிவாரணம் நிதியிலிருந்து கருணைத் தொகையை பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கொத்தவுட்ல மண்டலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியதால் அங்கிருந்தபட்டாசுகள் சரமாரியாக வெடித்து சிதறின. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதற்கிடையே, போலீஸார், மீட்பு குழுவினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்; “ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் தொழிற்சாலை விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகள் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.