தனது நண்பர்களின் காதலை சேர்த்து வைப்பதற்காக ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் இருந்து புனேவுக்கு நேற்று மாலை புறப்பட இருந்த ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்திற்கு போன் செய்த மர்ம நபர், குறிப்பிட்ட அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி அழைப்பை துண்டித்துள்ளார். இதனையடுத்து, பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு விமானத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அது போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது தெரியவந்தது. பின்னர், சில மணிநேர தாமதத்திற்கு பிறகு விமானம் புனேவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதனைத் தொடர்ந்து, டெல்லி போலீசாருக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் புகார் அளித்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணின் டவரை ஆராய்ந்த போது, அது டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு முகவரியை காட்டியது. பின்னர் அந்த முகவரிக்கு சென்ற போலீஸார், அங்கிருந்த அபினவ் பிரகாஷ் (24) என்ற இளைஞரை பிடித்து விசாரித்தனர். முதலில், தனக்கு எதுவும் தெரியாது என மழுப்பிய அபினவ், ஒருகட்டத்தில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
விசாரணையில், தனது நண்பர்களின் காதலை சேர்த்து வைப்பதற்காகவே இந்த காரியத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். அதாவது, அபினவ் பிரகாஷுக்கு ராகேஷ் மற்றும் குணால் ஆகிய இரு நண்பர்கள் இருக்கின்றனர். இவர்கள் அண்மையில் மணாலிக்கு சென்றபோது அங்கு இரு பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்தப் பெண்களை அழைத்துக் கொண்டு ராகேஷும், குணாலும் டெல்லி வந்துள்ளனர். டெல்லியில் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்ட அந்த இளம்பெண்கள் தங்கள் சொந்த ஊரான புனே செல்வதற்காக நேற்று ஸ்பைஸ் ஜெட் விமானத்தை புக் செய்தனர். இதற்கிடையே, அந்த இளம்பெண்கள் மீது அவரது நண்பர்களுக்கு காதல் மலர்ந்துள்ளது. எப்படியாவது காதலை சொல்லிவிடலாம் என்பதற்குள் அவர்கள் புனே புறப்பட்டு விட்டார்களே என அவர்கள் ஆதங்கப்பட்டுள்ளனர். நண்பர்களின் இந்த புலம்பலை கேட்ட அபினவ் பிரகாஷ், “இப்போ என்ன பண்ணனும்.. அவங்க புனே போகக் கூடாதா?” எனக் கேட்டுள்ளார். நண்பர்களும் அதற்கு ஆம் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து, போலி முகவரியில் சிம் கார்டு வாங்கிய அபினவ், அதை பயன்படுத்தி போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர், அடுத்த நிமிடமே விமானத்திற்குள் இருந்த இரண்டு பெண்களையும் தொடர்பு கொண்ட அபினவ் பிரகாஷ், “விமானம் இன்று புனே செல்லாது. வெளியே வாருங்கள்” என கெத்தாக கூறியுள்ளார். எந்த எண்ணில் இருந்து விமான நிறுவனத்திற்கு அவர் போன் செய்தாரோ அதே எண்ணில் இருந்து அந்தப் பெண்களுக்கும் போன் செய்ததால் போலீஸில் சிக்கியிருக்கிறார் அபினவ். தற்போது அபினவை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாகியுள்ள அவரது நண்பர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.