Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய் மகாராஷ்டிராவை அச்சுறுத்தி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளம்பெண்ணுக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் Guillain-Barre syndrome என்ற நரம்பியல் நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது. அதிலும் 3 பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இந்தநிலையில், தெலுங்கானா மாநிலத்தில் இந்த நோய் தொற்றுக்கு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, சித்திபேட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு குய்லின்-பாரே சிண்ட்ரோம் (ஜிபிஎஸ்) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் தற்போது கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். மாநிலத்தில் பதிவான முதல் ஜிபிஎஸ் வழக்கு இதுவாகும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்த நோய்த் தொற்று பதிவான இளம்பெண், புனேவுக்கு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
KIMS மருத்துவமனை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “தெலுங்கானாவின் சித்திபேட்டைச் சேர்ந்த 25 வயது பெண் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் மற்றும் GBS நோய் கண்டறியப்பட்ட பின்னர் வென்டிலேட்டர் சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளம்பெண்ணின் குடும்பத்தில் யாருக்கும் இந்த நோய் தொற்று இல்லை. அவர்களும் புனே பயணம் செய்யவில்லை. கடந்த ஒருவாரமாக கடும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளும் வேறொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக KIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.