தேனியில் உள்ள ஆவின் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; FSSAI அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்ட பால் பண்ணையை ஆய்வு செய்து சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு பதில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதற்கு பின்பு எந்த ஆய்வுக்கும் FSSAI அதிகாரிகள் தேனி பால்பண்ணைக்கு வரவில்லை. தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தேனி ஆவினில் பால்கோவா மற்றும் பாதாம் பவுடர் மட்டுமே வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆவினில் இருந்தே வருகிறது. தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை. ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர். தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.