பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்.15ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. இதுவரை 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி செயலி வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய நாளில் விண்ணப்பம் பதிவு செய்ய வருகை புரிய இயலாத நபர்களுக்குச் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. .
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியுள்ளவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் முதல் மாத பணம் திட்டம் தொடங்கப்பட்டு அதிகபட்சம் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படுகிறது. ஏ.டி.எம். கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. ஆனால் ஏ.டி.எம். கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதுவரை 57 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது என்ற காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட இருக்கிறது. சிலருக்கு சந்தேகங்கள் இருக்கும் பட்சத்தில் மறுபடியும் விண்ணப்பிக்க அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து முழு தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.