11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களில் உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் செய்முறைத் தேர்வின்போது ஆய்வக உதவியாளர் நியமனம் செய்ய வேண்டும்.

உடல் இயக்கக் குறைபாடு, பார்வை குறைபாடு, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்களின் விருப்பத்தின் பேரில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியியல் பாடங்களில் மட்டும் செய்முறைத் தேர்வுக்கு பதிலாக செய்முறைத் தொடர்பான கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கி செய்முறைத் தேர்வு செய்துகொள்ள செய்யலாம். செய்முறை தேர்வுகளை நடத்துவதற்கு போதுமான ஆசிரியர்களை நியமித்திட வேண்டும். இயற்பியல் பாட செய்முறைத்தேர்வுக்கு கால்குலேட்டர்களை பயன்படுத்த அனுமதிக்கலாம்.
மேலும் செய்முறைத்தேர்விற்கு அரசுத் தேர்வுத்துறையால் வழங்கப்பட்ட படிவத்தில் மாணவர்களின் மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், மதிப்பெண்களை மார்ச் 11-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.