18 வயது நிறைவடையாத குழந்தை/ வளரிளம் பருவத்தினரை ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவோருக்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம் 1986-ன் கீழ் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-09ம் தேதியன்று கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அணுசரிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கொத்தடிமைத் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் நசிமுத்தின் உத்தரவிட்டுள்ளார்.
இதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில், சென்னை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் ரங்கராஜன், சென்னை முதல் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி ஆகியோர் தலைமையில் குழு ஒருங்கிணைக்கப்பட்டு எடப்பாளையம் பகுதியில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகை செய்யும் பட்டறைகளில் 07.02.2023 அன்று கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி ஆய்வின் போது மேற்குவங்காளத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் கொத்தடிமைத் தொழிலாளர்களாகவும், சென்னையைச் சேர்ந்த 1 வளரிளம் பருவ தொழிலாளரும் அங்கு பணியிலிருந்தது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். வருவாய் கோட்டாட் சியரின் விசாரணையின் போது இவர்கள் இடைத்தரகர் மூலமாக முன் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டு 12 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கப்படுவதாகவும் வாரத்திற்கு ரூ.300/- முதல் ரூ.500/- வரை மட்டுமே கூலியாக வழங்கப்படுவதாகவும் தெரியவந்தது.
எனவே வருவாய் கோட்டாட்சியர் மூலம் மீட்கப்பட்ட 22 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கும் விடுதலைச் சான்று வழங்கப்பட்டது. அவர்களுக்கான உடனடி நிவாரணத் தொகை வழங்குவதற்கு வங்கிக் கணக்குகள் துவங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000/- அபராதமும் விதிக்க கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழித்தல்) சட்டம் 1976-ன் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
