தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபியான ஜாங்கிட் ராஜஸ்தான் மாநிலத்தில் அவரது சொந்த மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1985ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று, தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி-யாக பணி அமர்த்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பதவி உயர்வுபெற்ற ஜாங்கிட் ஓய்வு பெறும்போது டிஜிபியாக பணியாற்றினார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழகம் மறக்க முடியாத வெகு சில அதிகாரிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார். இவரை மையமாக வைத்து கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் உருவானது.
இவர் கடந்த 2019 ஜூலையில் ஓய்வு பெற்ற நிலையில், தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு சென்றார். அங்கு அவர் பாஜகவில் இணைந்து விட்டார் என்று முன்னர் செய்திகள் வெளியானது. ஆனால், அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில், ராஜஸ்தானில் அவரது சொந்த மாவட்டத்தில் பாஜக சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று உறுதியான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பார்மர் மக்களவைத் தொகுதியில் உள்ள கவாஸில் தான் அவர் வசித்து வருகிறார்.
அதனால் அந்த தொகுதியில் அவரை களமிறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. தேர்தல் வேலைகளை தொடங்கும்படி அவருக்கு பாஜக உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. ஜாங்கிட்டும் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.