இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் கசிந்துள்ளது.
இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். அரசு மாளிகைகள், முக்கிய அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. அந்த சமயம், இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பி, மாலத்தீவில் தஞ்சமடைந்தார். அதன் பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் விரைவில் நாடு திரும்புவார் என இலங்கை அரசியல் வட்டாரம் கூறி வந்தாலும், அதற்கான எந்த அறிகுறியும் தற்போது வரை தெரியவில்லை.

மாறாக வேறு ஒரு செய்தி தான் வெளியாகி உள்ளது. அதாவது, கோத்தபய ராஜபக்சேவுக்கான சிங்கப்பூர் விசா முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, கோத்தயபய ராஜபக்சேவுக்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ராஜதந்திர கடவூச்சீட்டு வைத்திருக்கும் இலங்கையர் ஒருவருக்கு தாய்லாந்தில் விசா இன்றி 90 நாட்கள் தங்கியிருக்க முடியும்.

இலங்கை மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுக்கு இடையில் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இதன்படி, கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் தாய்லாந்தில் எதிர்வரும் சில மாதங்களுக்குத் தங்கியிருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமது சொத்துக்களை தாய்லாந்தில் முதலீடு செய்யும்பட்சத்தில், தாய்லாந்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக தங்கியிருக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.