குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொண்டு பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 பதவிகளில் வரும் துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக மேம்பாடு உதவி இயக்குநர் உள்ளிட்ட 70 காலிப்பணியிடங்களுக்கும், குரூப்-1A பதவிகளில் வரும் 2 வன உதவி பாதுகாவலர் காலிப்பணியிடங்களுக்கும் என மொத்தம் 72 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு.I (குரூப் 1 மற்றும் குரூப்-1A பணிகள்) அறிவிப்பானது 01.04.2025 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. தொடர்ந்து, ஜூன் 15-ம் தேதி இதற்கான முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளானது திங்கள் முதல் வெள்ளி வரையிலான அனைத்து வேலைநாட்களிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்று வருகின்றது. இத்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நாளை முதல் நேரடியாக கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் வலியுறுத்தி உள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 1 தேர்வை எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முகவரிக்கு நேரில் சென்று அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், தேர்வுக்கான விண்ணப்பம், ஆதார் ஆகியவற்றின் நகல்களுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கிண்டி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகலாம்.