நாட்டில் உள்ள ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் ஒன்று தான் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY).. இதன் மூலம், நாட்டின் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச ரேஷன் வசதியை வழங்குகிறது. இந்த திட்டம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா தொற்றுநோய்களின் போது அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.
இந்தத் திட்டம் செப்டம்பர் 30, 2022 அன்று முடிவடைகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தை மேலும் நீட்டிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. இதுகுறித்து தகவல் அளித்த உணவுத்துறை செயலாளர் சுதன்ஷு பாண்டே, பிரதமர் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு எப்போது வெளியிடும் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
இந்த திட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதால் மத்திய அரசுக்கு 80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. எனினும் கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.. இந்த சூழலில் மத்திய அரசு இந்த இலவச ரேஷன் திட்டத்தை மேலும் நீட்டிக்கவே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.. இம்மாதம் முடிவடைய இன்னும் ஒரு வாரமே இருப்பதால் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY நன்மைகள்) பணவீக்கம் மற்றும் கொரோனா தொற்றுநோய்களின் போது மக்களுக்கு பெரும் நிவாரணம் அளித்துள்ளது. நாட்டின் 80 கோடி மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர். இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் ரேஷனை மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் தலா 5 கிலோ கோதுமை அல்லது அரிசியை மத்திய அரசு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது..