நாட்டின் சுதந்திர தின விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நாளில், சுதந்திர போராட்ட வீரர் தல்லாத வயதில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் சுந்தரம் (96), இவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. இவருடைய மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும், சேதமடைந்து தன்னுடைய வீடு இடிந்து விட்டதால், புதிதாக வீடு கட்டி தர வேண்டும் எனவும் கடந்த சில வருடங்களாக அதிகாரிகள் மற்றும் முதல்வருக்கு மனு அளித்து வந்ததாக தெரிகிறது.
ஆனாலும், அதிகாரிகளோ அல்லது முதல்வரோ இதுவரையில், எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஆகவே, காமராஜர் சிலை முன்பு அவரது கோரிக்கை அடங்கிய பதாகையுடன், உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார் சுந்தரம்.
இந்த சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்தவுடன், மணப்பாறை காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையைச் சார்ந்தவர்கள் காமராஜர் சிலைக்கு வந்து உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்த சுதந்திர போராட்டத் தியாகி சுந்தரத்திடம், பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
அதோடு, அவருடைய கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, சரியான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்த அதிகாரிகள், ஆட்டோவில் ஏற்றி சுந்தரத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். சுதந்திர தினத்தன்று, சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.