ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் அடுத்த நிதியாண்டிலிருந்து, வருமான வரி மசோதா, 2025 இன் விதிகளின் கீழ், வருமான வரித்துறை அதிகாரிகள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் கணக்கை அணுகலாம்.
அரசாங்கம் ஏன் இந்த மசோதாவை கொண்டு வந்தது?
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி புதிய வருமான வரி மசோதா, 2025 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து விளக்கமளித்தார்.
1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தை மாற்றாக இருக்கும் இந்த மசோதா, கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டறிய அரசுக்கு உதவும். இது பெரும்பாலான பழைய விதிகளைத் கொண்டிருந்தாலும், மொழியை எளிமைப்படுத்தவும் தேவையற்ற பிரிவுகளை நீக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மசோதா புதிய தொழில்நுட்பத்துடன் வரி அமலாக்கத்தைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்கவும், கிரிப்டோகரன்சிகள் போன்ற மெய்நிகர் சொத்துக்கள் கவனிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் உதவும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார். டிஜிட்டல் கணக்குகளிலிருந்து வரும் சான்றுகள், நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பை நிரூபிக்கவும், வரி ஏய்ப்பின் சரியான அளவைக் கணக்கிடவும் அதிகாரிகளுக்கு ஆதாரங்களை வழங்கும்.
மொபைல் போன்களில் மறைகுறியாக்கப்பட்ட செய்திகள் ரூ.250 கோடி கணக்கில் வராத பணத்தைக் கண்டுபிடிக்க வழிவகுத்தன. வாட்ஸ்அப் செய்திகளில் இருந்து கிரிப்டோ சொத்துக்களின் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் தொடர்பு ரூ.200 கோடி கணக்கில் வராத பணத்தைக் கண்டறிய உதவியது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
பணத்தை மறைத்து வைத்திருக்கும் இடங்களை கண்டறிய google மேப் HISTORY உதவியதாகவும், ‘பினாமி’ சொத்து உரிமையைத் தீர்மானிக்க இன்ஸ்டாகிராம் கணக்குகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதிய மசோதாவின் கீழ் அதிகாரிகள் எதை அணுகலாம்?
வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற டிஜிட்டல் தொலை தொடர்பு தளங்களை அணுக இந்த புதிய மசோதா வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உரிமையை வழங்கும் என்று நிதியமைச்சர் விவரித்தார். மேலும் நிதி பரிவர்த்தனைகளை மறைக்கப் பயன்படுத்தப்படும் வணிக சாப்ட்வேர் மற்றும் சர்வர்களையும் அரசாங்கத்தால் அணுக முடியும்.
இந்த மசோதா வெளிப்படுத்தப்படாத வருமானத்தின் வரையறைக்குள் டிஜிட்டல் சொத்துக்களை உள்ளடக்கும். இதில் டிஜிட்டல் டோக்கன்கள், கிரிப்டோகரன்சிகள் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.
வருமான வரி சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையின் போது டிஜிட்டல் இடங்களை அணுக வருமான வரி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இது மின்னஞ்சல் சர்வர்கள், சமூக ஊடக கணக்குகள், ஆன்லைன் முதலீடு, வர்த்தக தளங்கள் மற்றும் சொத்து உரிமை விவரங்களைச் சேமிக்கும் வலைத்தளங்களை உள்ளடக்கியது. வரி விசாரணைகளின் ஒரு பகுதியாக டிஜிட்டல் சூழல்களை ஆய்வு செய்வதற்கான அணுகல் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ற அதிகாரத்தையும் இது அதிகாரிகளுக்கு வழங்குகிறது.