கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள உண்ணாமலையில் பனங்காட்டு தெருவில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் குணசேகரன். இவருக்கும் பவானி என்பவருக்கும் திருமணமான நிலையில் கௌதம் என்ற ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி, மற்றும் மகனோடு கடலூர் சில்வர் பீச் சென்றுள்ளார்.
அங்கே, குளித்துக் கொண்டிருந்தபோது, குணசேகரன் கண்ணெதிரே மனைவி கடலுக்குள் அடித்து செல்லப்பட்டுள்ளார். பின்னர், தீவிர தேடுதலுக்கு பின் மனைவி சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறந்த சோகத்தில் பித்து பிடித்தது போல் சுற்றித்திருந்த குணசேகரன், சரியாக வேலைக்கும் செல்லாமல் குழந்தையையும் கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனை பற்றி அறிந்த குழந்தையின் தாத்தா மற்றும் பாட்டி இருவரும் குணசேகரனிடமிருந்து குழந்தையை அழைத்து சென்று அவர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த நிலையில் மனைவியை இழந்த விரக்தியில், சென்ற ஜனவரி 7-ம் தேதி கடலூர் பேருந்து நிறுத்தத்தில் நின்ற தனியார் பேருந்து ஒன்றின் டயரில் தலையைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தவே, குணசேகரன் காப்பாற்றப்பட்டார். அங்கிருந்த மக்களும் ஓட்டுநரும் திட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது காலையில் நடந்துள்ளது. அதன் பிறகு, மீண்டும் குணசேகரன் அன்று மாலையே அதே இடத்தில் வேறொரு தனியார் பேருந்து எடுக்கும் ஆகும்போது பின் டயருக்கு அடியில் தலையைக் கொடுத்துள்ளார்.
இதனை யாரும் கவனிக்காததால், கண்ணிமைக்கும் நேரத்தில் பேருந்து அவர் மீது ஏறி இறங்கியது. இதனால் அவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இது பற்றி கடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.