மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தின் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ திரவ இயக்க உந்தும் வளாகத்தில் ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றது. அதாவது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் மொத்தமாக 670 விநாடிகள் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் மூன்று பேர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளனர். பூமியில் இருந்து, 400 கி.மீ தொலைவில் மூன்று நாட்கள் விண்வெளியில் இவர்கள் ஆய்வு செய்வர். பின்னர் மீண்டும் பூமிக்கு அழைத்துவரப்படுவர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சோதனைகளில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.
இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள இன்ஜின்களின் சோதனை, தமிழகத்தின் மகேந்திரகிரியில் உள்ள ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. அந்தவகையில், பல சூழ்நிலைகளுக்கு ஏற்ப இந்த இன்ஜின்கள் செயல்படும் வகை நடத்தப்பட்ட ககன்யான் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. மேலும், உலகிலேயே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் 4வது நாடாக இந்தியா விரைவில் இடம்பெறும். அதுமட்டுமல்லாமல், ககன்யான் என்பது முழுமையான தன்னாட்சி கொண்ட 3.7 டன் எடை உள்ள விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது.