திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தோடு முருகனை தரிசனம் செய்ய வருகை புரிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள திருச்செந்தூர் கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டது என்று கூறப்படுகிறது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் என்றால் அது திருச்செந்தூர் தான். மற்ற கோயில்கள் எல்லாமே மலைக்கோயில்களாகவே இருக்கும்.
திருச்செந்தூரை பொறுத்தவரை எல்லா நாட்களிலும் முருகனை தரிசிக்க பக்தர்கள் வருவார்கள். எனினும் பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி , தை பூசம் போன்ற விழாக்களில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் கந்தசஷ்டி விழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள். ஐப்பசி மாதம் நடைபெறும் கந்தசஷ்டி விழா என்பது உலக புகழ்பெற்ற விழாவாக இருந்து வருகிறது. மொத்தம் ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி விழாவின் இறுதியாக ஆறாம் நாளன்று பிரசித்து பெற்ற நிகழ்ச்சி சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
சூரசம்ஹாரம் என்பது சூரன் எனப்படும் அசுரனை முருகன் வேலால் வதம் செய்யும் நிகழ்வாகும். இந்நிகழ்வினை பார்த்துவிட்டு கடலில் புனித நீராடி சென்றால் மனதில் நினைத்த அனைத்த காரியமும் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே ஆண்டுதோறும் பொதுமக்கள் 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் பார்ப்பதற்காக கூட்டம் கூட்டமாக திருச்செந்தூர் நோக்கி படையெடுப்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் வழக்கம் போல் திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹார விழா நடைபெறவுள்ளது. இதை காண லட்சக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் குவிந்த வண்ணம் உள்ளனர்.
Read more ; பெண்கள் சகவாசம்..! கெட்ட பழக்கம்..! நடிகர் முரளி குறித்து பிரபலம் சொன்ன சீக்ரெட்ஸ்…!