சென்னை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியின் தாளாளராக தன்னுடைய உறவினரின் வீட்டிற்கு அந்த மாணவி அடிக்கடி சென்று வருவது வழக்கம். கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதம் 29ஆம் தேதி அந்த மாணவிக்கு பள்ளி தாளாளர் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு அந்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் தொந்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட அந்த மாணவி, கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் அந்த மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலமாக இந்த சம்பவம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பள்ளி தாளாளரையும், அவரது மனைவியையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற தேர்வு நீதிபதி ராஜலக்ஷ்மி முன்பாக நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் கவிதா ஆஜராகி வாதம் செய்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி இந்த வழக்கில் வழங்கி இருக்கும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்த வழக்கில் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் எல்லோரும் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக பிறழ் சாட்சியாக மாறி இருப்பது துரதிஷ்டவசமானது. அந்த சிறுமியின் தந்தை கூட தன்னுடைய மகளை பாதுகாக்க தவறிவிட்டார் என்று தெரிவித்துள்ளார். வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பள்ளி தாளாளருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் பதிக்கப்படுகிறது. அவருடைய மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.