தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 12 தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதனை தொடர்ந்தே இவர்களின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர்; தேசிய ஜனநாயக கூட்டணி உடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.