நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் நீண்ட காலமாக வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகள் வழியாக பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் அதிக சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இந்த சிரமத்தை குறைக்க மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதாவது வருடாந்திர மற்றும் வாழ்நாள் சுங்கச்சாவடி பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் தொந்தரவு இல்லாத பயணங்களை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
ஆம். ஒரு முறை கட்டணம் செலுத்தும் ‘வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ்-ஐ மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் நடுத்தர வர்க்கம் அல்லது தனியார் கார் உரிமையாளர்கள் இரண்டு வழிகளில் பாஸ் எடுத்துக் கொள்ளலாம். அதாவது வாகன ஓட்டிகள்,15 ஆண்டுகளுக்கு வருடாந்திர பாஸ் அல்லது வாழ்நாள் பாஸை வாங்கலாம். ரூ.3000 கட்டணம் செலுத்தினால் ஒரு ஆண்டு முழுவதும் கட்டணம் செலுத்தாமல் பயணிக்கலாம். அதே போல் ரூ.30,000 ஒரு முறை கட்டணம் செலுத்தி வாழ்நாள் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கலாம்.
இந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, தற்போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. மேலும் நெடுஞ்சாலை பயனர்களுக்கு நிவாரணம் அளிக்க, ஒரு கி.மீ.க்கு சுங்கச்சாவடி விகிதத்தைக் குறைப்பது குறித்து அமைச்சகம் யோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருடாந்திர சுங்கச்சாவடி பாஸ் அல்லது வாழ்நாள் பாஸின் நன்மைகளைப் பெற, நீங்கள் கூடுதல் பாஸ்களை வாங்கத் தேவையில்லை. அவற்றை FASTags மூலம் பெற்றுக்கொள்ளலாம்..
தற்போது, மாதத்திற்கு சுமார் ரூ.340 செலவாகும் மாதாந்திர பாஸ் மட்டுமே உள்ளது, இது ஆண்டு பயனர்களுக்கு ஆண்டுக்கு ரூ.4,080 வரை செல்லலாம். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் ரூ.3000 இல் ஆண்டு முழுவதும் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கில் வரம்பற்ற பயணத்துடன் வருடாந்திர பாஸைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த விருப்பம் மாதாந்திர பாஸ்களை விட மிகவும் மலிவானது. எனவே வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு விருப்பமான தேர்வாக இருக்கலாம்.
சமீபத்தில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியும் கார் உரிமையாளர்களுக்கு பாஸ்களை வழங்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது என்று கூறியிருந்தார்,
நகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகள், 60 கி.மீ.க்கும் குறைவான இடைவெளியில் சுங்கச்சாவடிகள் மற்றும் பிளாசாக்களில் வன்முறை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஒரே இடத்தில் தீர்வைக் கொண்டுவர அமைச்சகம் இலக்கு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
வணிக வாகனங்கள் சுங்க வருவாயில் அதிக பங்களிப்பை வழங்குகின்றன
2023-24 ஆம் ஆண்டில் மொத்த சுங்க வருவாய் ரூ.55,000 கோடியாக இருந்தது, இதில் தனியார் கார்களின் பங்கு ரூ.8,000 கோடி மட்டுமே. சுங்கச்சாவடி பரிவர்த்தனை மற்றும் வசூல் அறிக்கைகள் 53 சதவீத பரிவர்த்தனைகள் தனியார் கார்களுக்கானவை என்று தெரிவிக்கின்றன.
ஆனால் அவற்றின் பங்கு வெறும் 21 சதவீதம் மட்டுமே. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சுங்கச்சாவடிகளில் 60 சதவீத போக்குவரத்தில் தனியார் வாகனங்கள் உள்ளன, மேலும் வணிக வாகன விநியோகம் பகல் மற்றும் இரவு முழுவதும் சமமாக உள்ளது. சில ஆண்டுகளில் பாஸ்கள் காரணமாக வருவாய் இழப்பு ஏற்படாது என்றும் கூறப்படுகிறது..