சென்னையில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்படும் சிக்கலை தடுக்க மாநகராட்சி சார்பில் மாட்டு கொட்டகைகள் கட்டப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் மாடுகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் மாடுகள் முட்டி காயமடைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு முதல் சாலையில் பிடிபடும் மாடுகளுக்கு விதிக்கப்பட்ட வந்த அபராதம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், 2-வது முறையாக பிடிபடும் மாடுகளுக்கு அபராத தொகை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாகவும் மாநகராட்சி உயர்த்தியது. ஆனாலும் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளின் எண்ணிக்கை குறையவில்லை.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டு கொட்டகைகள் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழுக்காத தரைதளம், மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவு நீர் வடிகால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான Trevis உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது. ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றுக்கு ரூ.10 வீதம் வாடகை வசூலித்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பேசின் பாலம் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவிற்கு 7,700 சதுர அடி பரப்பளவில் நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒவ்வொரு இடத்திலும் சுமார் 200 மாடுகளை பராமரிக்கும் வகையில் 15 மாட்டு கொட்டகைகளை கட்டி வருகிறது மாநகராட்சி. இவை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அதன்மூலம் மாநகர சாலைகளில் சுற்றித் திரியும் சுமார் மாடுகள் கொட்டகைக்குள் அடைக்கப்பட்டுவிடும். அவற்றால் சாலைகளில் ஏற்படும் தொல்லைகள் குறையும். மாநகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.