தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு தேர்வுகளின் அதிக மதிப்பெண்கள் பெற்ற சுமார் 1500 மாணவ, மாணவிகளை நடிகர் விஜய் ஜூன் மாதத்தில் சந்திக்கிறார்.
நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது. அதில் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் எடுத்த 1,500 மாணவர்களை அவர் சந்தித்து நிதியுதவி வழங்க உள்ளார். அதுமட்டுமின்றி ஒரு தொகுதியில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பிளஸ் டூ மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற 10ஆம் வகுப்பு மாணவர்கள் என அவர்கள் தேர்வு செய்கின்றனர். அவர்களுடன் தாய், தந்தையை இழந்த அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் விஜய் சந்தித்து நிதியுதவி வழங்க உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதற்கான பட்டியலை தயாரித்து விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு ஜூன் மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதற்காக ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா திருமண மண்டபம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம், நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.திருமண மண்டபம் மற்றும் புழல் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் என 4 இடங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.