கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மானியம் வழங்க தமிழக அரசு அரசாணை ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியதாவது; ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 2022-2023-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில் பெருமளவில் விவசாயத் தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும்.
மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் இம்மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 450 ஆதிதிராவிடர் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.2,02,50,000 மானியமாக மத்திய அரசு நிதியிலிருந்து செலவிட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 50 பழங்குடியினர் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்கி பயனடைய ரூ.22,50,000 மாநில அரசு நிதியிலிருந்தும் பெற்று வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கியும் அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.