தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: முதலமைச்சர் 75ஆவது சுதந்திர தின உரையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1-ம் தேதி முதல் அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பின்படி தலைமைச்செயலளாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி ஜூலை 1-ம் தேதி முதலே உயர்த்தி வழங்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட கூடுதல் அகவிலைப்படி ஜூலை 01ஆம் தேதி முதல் ரொக்கமாக வழங்கப்படும். ஜனவரி 1 முதல் ஜூலை 30-ம் தேதி வரை அகவிலைப்படியானது தொடர்ந்து 31 விழுக்காடாகவே இருக்கும். ஜூலை 2022-ம் மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவைத்தொகையினை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியினைக் கணக்கிடுகையில் அது 50 காசும் அதற்கு மேலும் இருக்குமாயின் அது அடுத்த ஒரு ரூபாயாக கணக்கிடப்பட வேண்டும்.அதுவே, 50 காசுக்குக் குறைவாக இருந்தால் அது விட்டுவிடப்பட வேண்டும்.
மேலே அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேரப்பணியாளர்களுக்கும், சில்லறை நிதியிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். இந்த ஆணையில் அனுமதிக்கப்பட்ட திருத்தப்பட்ட அகவிலைப்படி, பகுதி நேர பணியாளர்களுக்கு இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.
