காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ளது. இந்தியாவிற்கும் அதன் பாதுகாப்புப் படையினருக்கும் எதிராக உணர்வுபூர்வமான மற்றும் தவறான உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தடைசெய்யப்பட்ட சேனல்களில் டான், சமா டிவி, ஏஆர்ஒய் நியூஸ், போல் நியூஸ், ரஃப்தார், ஜியோ நியூஸ் மற்றும் சுனோ நியூஸ் போன்ற முக்கிய பாகிஸ்தானிய செய்தி நிறுவனங்கள் அடங்கும். இதற்கிடையே, பிரிட்டிஷ் ஊடகமான பிபிசியும் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிபிசி செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் நடந்த கொடிய தாக்குதலுக்குப் பிறகு “இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பிபிசி கட்டுரையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பயங்கவாதிகள்/தீவிரவாதிகள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக போராளிகள் (Militants) என்று பிபிசி குறிப்பிட்டுள்ளது. பிபிசி செய்தி வெளியிட்டதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
இதனால் நரேந்திர மோடி அரசு, பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு கடிதம் எழுதியது. இனிமேல் தாக்குதல் குறித்த பிபிசியின் செய்திகள் கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இது குறித்து இந்தியாவின் கடும் அதிருப்தியை வெளியுறவு அமைச்சகம் பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்குத் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.