ஆளுநர் ஆர்.என். ரவி போட்டி அரசாங்கம் நடத்த விரும்பினால் அதன் தன்மையை மக்கள் உணர வைப்பார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது அறிக்கையில்: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள ஆர்.என்.ரவி தான் பதவியேற்ற நாள் முதல் இன்றுவரை,தான் பதவி ஏற்கும்போது எடுத்த இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகவே செயல்பட்டு வருகிறார் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் புரிகிறது. இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 159-இன்படி எடுத்த பிரமாணத்தின் வாக்கியங்களில் உள்ள உறுதிமொழி,அவரது பதவிக் கால கடமைகளான,இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் சட்டத்தையும் பாதுகாப்பது என்பதாகும்.தனது பணிக் காலத்தில் மக்கள் நலனுக்குரிய கடமைகளைச் செய்து,மாநில மக்களின் நல்வாழ்வுக்குரிய பணி செய்தல் அவசியமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆளுநர்,தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை,மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிராகவே கல்வி சம்பந்தமாக அமைச்சரவையின் மசோதாக்களை ஏற்க மறுக்கிறார்.அதற்கு அவரது மறுப்பு அல்லது விளக்கம் தேவையானால், மாநில அரசுக்கு அனுப்ப வேண்டியதுதான் முறை அவருடைய கடமை. பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு உரியது என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவையும் கிடப்பில் போட்டுள்ளார்.
மக்கள் சக்தியைப் புறந்தள்ளிவிட்டு இப்படி மக்களாட்சிக்குப் பதிலாக,பகிரங்கமான எதிர்விளைவுகளில் ஈடுபடுவது ஜனநாயக விரோதம்,அரசமைப்புச் சட்ட மாண்பினை காற்றில் பறக்க விடும்,கடமையை தவறிடும் குற்றம் என்பதை ஆளுநர்கள் உணர வேண்டும். உணர மறுத்தால்,மக்கள் உணர வைப்பார்கள். உண்மையான இறையாண்மையின் உறைவிடம் மக்கள், மக்களே! என்பதை யதேச்சதிகாரத்தை நம்புவோர் புரிந்துகொள்ள வேண்டும்! அரசமைப்புச் சட்டமும் அதைத்தான் வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.