ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து வேதனை அளிக்கிறது என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர், நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று தெரிவித்தார்.. மேலும் “ வெளிநாடுகளில் இருந்துவரும் நிதிகள் பலவும் நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.. குறிப்பாக கூடங்குளம் அணு உலை, விளிஞ்சம் துறைமுக திட்டங்களுக்கு எதிராக மக்களை தூண்ட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது..
குறிப்பாக ஸ்டெர்லைட் போராட்டம் தூண்டப்பட்ட போராட்டம்.. ஸ்டெர்லைட் போராட்டிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வந்துள்ளது.. நாட்டின் காப்பர் தேவையில் 40% நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட்டை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர்.. இதே போல் வடகிழக்கு மாநிலங்களில் ஆண்டுக்கு ரூ.250 கோடி வரை வெளிநாட்டு நிதி நாட்டுக்கெதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது..
வெளிநாட்டு நிதியை கட்டுப்படுத்த மத்திய அரசு எஃப்.சி.ஐ நிதியை முறைப்படுத்தி உள்ளது.. நாட்டின் வளர்ச்சியை தடுக்க பல நாடுகள் செயல்பட்டு வருகின்றன..” என்று தெரிவித்தார்.. மேலும் பேசிய அவர், பேரவை தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் நாகரீகமாக ஒப்புதல் அளிக்கவில்லை என்று பொருள்..” என்று தெரிவித்தார்..
தமிழக ஆளுநர் தொடர்ந்து ஏதாவது சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.. தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த கருத்து வேதனை அளிக்கிறது என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார்.. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், உயர்ந்த பதவியில் இருக்கும் ஆளுநர், பொதுவெளியில் கருத்து சொல்வது அவருக்கு அழகல்ல.. பிரதமர் மோடி கடுமையான உழைப்பால், நாட்டு மக்களை காக்க உலக தலைவராக உயர்ந்துள்ளார்.. அப்படி இருக்கும் போது, அந்நிய நாட்டு பணம் இந்தியா வருவதற்கு அனுமதிக்க மாட்டார்.. மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்த கால அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.. மீண்டும் ஆளுநர் இதுபோன்ற கருத்தை சொல்வது வேதனையாக இருக்கிறது..” என்று தெரிவித்தார்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், நோய் பரவுவதாகவும்க் கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அப்போது, போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..