தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சருத்துப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மலர் நிகா (21), இவரது கணவர் ஞானசேகர், ஓராண்டுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். கணவனை இழந்த மலர் நிகாவுக்கு ஒன்றரை வயதில் ஹர்ஷன் என்ற ஆண் குழந்தை உள்ளார். இந்நிலையில் குழந்தை ஹர்ஷன் நேற்றைய தினம் ஜெல்லி மிட்டாய் சாப்பிட்டபோது மூச்ச்சுத்திணறல் ஏற்ப்பட்டுள்ளது.
மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட குழந்தை ஹர்ஷனை ஆட்டோவில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தாய் மலர் நிகா அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஹர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உணவுக்குழாயில் ஜெல்லி மிட்டாய் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இறந்த ஒன்றரை வயது குழந்தை ஹர்ஷனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மிட்டாய் சாப்பிட்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மிட்டாய் போன்றவற்றை கொடுக்கக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுகின்றனர். ஜெல்லி மிட்டாய் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.