ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு சார்பில் வழங்கப்பட்ட குடற்புண் மாத்திரைகளை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 – 12ஆம் வகுப்பு வரை சுமார் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் இன்று அரசு சுகாதாரத்துறை சார்பில் குடற்புண் மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவிகள் பள்ளியிலே திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையறிந்த ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மாணவிகளை மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் மயக்கம் அடைந்ததை அறிந்த பெற்றோர்கள் பள்ளியிலும், மருத்துவமனையிலும் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனை தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு சென்று மாணவிகளுக்கு சிகிச்சையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு குடற்புண் மாத்திரைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.