Guinness record: வனங்களை அழிப்பதை நிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரத்தை கட்டியணைத்தப்படி நின்று சமூக ஆர்வலர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டா நாட்டில், தலைநகர் கம்பாலா நகரில், 29 வயதான, ஃபெயித் பேட்ரீசியா அரியோகோட் (Faith Patricia Ariokot), எனும் சுற்றுச் சூழல் ஆர்வலர், மரங்களை வெட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய சாதனை புரிந்துள்ளார். வனங்களை அழிப்பதை நிறுத்தவும், புதிதாக பல மரங்களை நடுவதை ஊக்குவிக்கவும், உலகெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு பெரிய மரத்தின் தண்டு பகுதியை பேட்ரீசியா 16 மணி நேரம் 6 நொடிகள் தொடர்ந்து கட்டியணைத்தபடி நின்று கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய பேட்ரீசியா, இந்த சாதனைக்காக ஒரு மரத்தை தேர்ந்தெடுப்பது திருமண உடையை தேர்ந்தெடுப்பதை போன்ற அனுபவமாக இருந்தது. நான் கட்டியணைத்தபடி நின்ற மரத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை; அதுதான் என்னை தேர்ந்தெடுத்ததாக உணர்கிறேன். அந்த மரத்தை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்து விட்டது. மரங்களை காக்க வேண்டியது மனிதர்களின் கடமை. மரங்கள்தான் பருவநிலை மாற்றங்களை தடுத்து சீரான தட்பவெட்பம் உலகெங்கும் உள்ள மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்கின்றன.
இந்த முயற்சியில் எனது கால்கள் வலியாலேயே என்னை கொல்வது போல் இருந்தது. மரத்தின் கரடுமுரடான பகுதிகளில் கைகளை அழுத்தி கொண்டிருந்ததால் கைகளும் மிகவும் வலிகளை தந்தன. இருந்தும் நான் மன உறுதியுடன் கட்டியணைத்தபடி இருந்தேன் என்று கூறினார்.
Readmore: உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிப்பு..!! 200 கிலோ எடை, 26 அடி உயரம்..!!