குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்துக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அகமதாபாத்தில் இன்று வாக்களித்தனர்.
குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தயார் ஹீரா பென்,காந்தி நகரில் உறவினர்கள் உதவியுடன் சக்கர நாற்காலியில் சென்று வாக்களித்து சென்றார். முன்னதாக, நேற்று காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு சென்ற பிரதமர், தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். பிரதமர் மோடி வாக்களிக்க வருகை தந்ததால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பிரதமரைக் காண அங்கு பெருமளவில் மக்களும் திரண்டு நின்று இருந்தனர்.
வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்தப்பின் பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தலை திருவிழா போல் சிறப்பித்து வருகிறது. ஜனநாயக கடமையாற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் நன்றி. தேர்தலை அமைதியாக நடத்தி வரும் தேர்தல் ஆணையத்தை பாராட்டுகிறேன். அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்” என்று கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது மகனும் பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா உட்பட அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தின் நாரன்புராவில் உள்ள ஏஎம்சி துணை மண்டல அலுவலகத்தில் வாக்களித்தனர். அப்போது பேசிய அவர், “அனைவரும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அமித்ஷா கூறினார்.