அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் நடப்பதை போன்று கேரளாவில் உள்ள பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விவேகோதயம் என்ற பள்ளியில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. இன்று காலை 10 மணி அளவில் பள்ளிக்குள் புகுந்த நபர் முதல்வரின் அறைக்கு சென்று இருக்கிறார். பின்னர் வகுப்பறைகளுக்கு சென்ற அவர் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்பட்டது.
இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது பெயர் ஜகன் என்பதும் அவர் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த மாணவர் போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இந்த வித காயமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தெரிவித்துள்ள ஆசிரியர்கள் துப்பாக்கி சூடு நடத்திய மாணவன் கடந்த ஓராண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளியில் படித்ததாகவும் ஆண்டு இறுதித் தேர்வு எழுதவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இன்று காலை முதல்வர் அறைக்கு வந்த அந்த பழைய மாணவர் தன்னிடமிருந்து பறித்த தொப்பியை தருமாறு கேட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வகுப்பறைக்கு சென்று அவர் இரண்டு ஆசிரியர்களைப் பற்றி விசாரித்த பின் தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி மூன்று முறை சுட்டதாக தெரிவித்துள்ளனர். கேரளாவில் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.