இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியை எவ்வளவு எதிர்பார்த்து காத்திருக்கிறோமோ அதே போல தீபாவளி போனஸ் என்பது உழைக்கும் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. பல வீடுகளில் ஆடித் தள்ளுபடியிலேயே தீபாவளி ஷாப்பிங்கை முடித்துவிட, இன்னும் சில வீடுகளில் போனஸை நம்பித்தான் ஷாப்பிங் பண்ணத் திட்டமிட்டு வருகிறார்கள். போனஸ் போட்டிருந்தால் சனி, ஞாயிறு கிழமைகளில் ஷாப்பிங் செய்து விடலாம் எனத் திட்டமிட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி போனஸ் வராததால், பல ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
போனஸ் ஏன் வழங்க வேண்டும் : உழைப்பின் வரலாறு தான் மனித சமூகத்தின் வரலாறு என்ற கூற்றை கேள்வி பட்டிருப்போம். உழைப்பு என்பது தனிமனித நடவடிக்கை அல்ல. அதனிடம் சமூகப் பண்பு உள்ளது. முதலாளிகள் சம்பாதிக்கும் லாபத்தொகையில் இருந்து, உழைப்பைச் செலுத்தும் தொழிலாளிகளுக்கும் பங்கு தர வேண்டும் என்கிற நோக்கில் 1965ம் ஆண்டு தொழிலாளர்களுக்கான போனஸ் வழங்கும் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இலாபத்தின் அடிப்படையில் கட்டாயம் போனஸ் வழங்கப்பட வேண்டும்.
முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டு போனஸ் வழங்கள் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது. தற்போதைய திருத்த சட்டத்தின் படி கட்டணம், போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து மாதத்திற்கு ரூ.21 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, உங்களது மாதச் சம்பளம் ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், உங்களுக்கு போனஸ் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.