மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை கூட தாண்டாது என தெரிவித்துள்ள அமித் ஷா, தேர்தல் முடிவை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கே இழப்பார் என்று தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் குஷி நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, ”முதல் 5 கட்டத் தேர்தல்களில் மோடி 310 இடங்களைக் கடந்துவிட்டார். 6 மற்றும் 7-வது கட்டத் தேர்தலுக்குப் பிறகு அவர் 400-ஐ தாண்ட வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40-ஐ கூட தாண்ட முடியாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் பிரதமராக இருப்பார் என்று நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர். ஜூன் 4ஆம் தேதி மதியம் ராகுல் காந்தியின் ஆட்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தால் தோற்றுவிட்டோம் என்று சொல்வதை நீங்கள் பார்ப்பீர்கள். அதோடு, தோல்விக்கான பழி மல்லிகார்ஜுன கார்கே மீது விழும். அவர் தனது பதவியை இழப்பார்.
இண்டியா கூட்டணியினர், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறியுள்ளனர். ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து அவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்குவார்கள். கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் செய்ததை இண்டியா கூட்டணி மேற்கு வங்கத்திலும் செய்தது. ஆனால், அங்குள்ள உயர்நீதிமன்றம் அதைத் தடை செய்தது. அயோத்திக்குச் சென்ற கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சமாஜ்வாதி அரசுதான். கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கும் ராமர் கோயில் கட்டியவர்களுக்கும் இடையேயான தேர்தல் இது.
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. எனவே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை கேட்க வேண்டாம் என கூறுகிறது. காங்கிரஸ் கட்சி அணுகுண்டுக்கு பயப்படலாம். பாஜக பயப்படாது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமானது. நாங்கள் அதனை மீட்போம்” என தெரிவித்தார்.
Read More : ஒருவர் எவ்வளவு நேரம் உட்கார்ந்து வேலை செய்யலாம்..? இளைஞர்களே கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!