தமிழ்நாட்டில் தற்போது டிரெண்டிங்கில் உள்ள ஹேஷ்டேக் ‘#வாரிசு’ என்பதுதான். சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், இது தொடர்பாக ஏகப்பட்ட விமர்சனங்கள் முன்வந்தன. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றிருப்பது முழுக்க முழுக்க ‘வாரிசு’ அரசியல்தான் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இப்படி ‘வாரிசு’ குறித்த பேச்சுகள் அடிப்பட்டு வரும் நிலையில், மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போஸ்டரில் 4 படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. முதல் படத்தில் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவ் காந்தியும் இருக்கின்றனர். அடுத்த படத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாவது மற்றும் நான்காவது உள்ள படத்தில் வைகோ, துரை வைகோ மற்றும் ராமதாஸ் அவருடன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆக இந்த நான்கு படங்களுக்கு கீழ் விஜய்யின் பெரிய படத்தை போட்டு, ‘எத்தனை வாரிசுகள் இங்கு வந்தாலும் மக்கள் கொண்டாடும் தமிழகத்தின் அரசியல் வாரிசே வருக வருக’ என்று அச்சிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த எவ்வித கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிக்காத நிலையில், இதுபோன்று போஸ்டர்களால் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு பிள்ளையார் சுழி போட்டது 2013ஆம் ஆண்டு வெளியான தலைவா படம் என்று சொன்னால் அது மிகையாகாது. அப்படம் வெளியிடப்படுவதற்கு முன்னர் இதே போன்று போஸ்டர்கள் ஒரு சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. இதனையடுத்து வெளியான கத்தி, சர்க்கார், மெர்சல், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் அரசியில் வசனங்கள் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன. எனவே, இவரது அரசியல் வருகையை எதிர்பார்த்து ரசிகர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் போஸ்டர்களை ஒட்டி வந்துள்ளனர். இந்நிலையில் தற்போது மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் மீண்டும் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும், ஆளும் கட்சி குறித்தும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.