கடந்த மாதத்திலிருந்து தமிழகத்தை கனமழை பாடாய்படுத்தி வருகிறது. டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் கனமழை மற்றும் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தென் மாவட்டங்களான திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி பகுதிகளில் பெய்த கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழக பகுதிகளுக்கு தொடர்ந்து வானிலை எச்சரிக்கை வந்து கொண்டிருப்பது பொதுமக்களிடம் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த தகவல்களின்படி கேரளா கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இந்திய பெருங்கடலை ஒட்டியுள்ள இலங்கையின் தென்பகுதியிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி இருக்கிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடலில் ஏற்பட்டிருக்கும் வளிமண்டல சுழற்சியால் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.