தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்தாண்டு பருவமழை ஓரளவு கைகொடுத்தாலும், இம்முறை கொளுத்திய வெயிலானது, வறட்சியை அதிகப்படுத்திவிட்டது. எனினும், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்புகூட தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மழை நிலவரம் குறித்து மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
வட தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருவதால், இன்று அதாவது, 12ஆம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, நாளை 13ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.