தமிழகத்தில் இன்று 13 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 12, 13-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி,திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 12-ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், சேலம், நாமக்கல் கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரைமற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 13-ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 13-ம் தேதி வரை மணிக்கு அதிகபட்சமாக 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.