குடிபோதைக்கு அடிமையான மகனை, தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே புளியங்கரணை கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (57). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் ஆனந்த் (26) வீட்டில் தந்தை சொல்வதை கேட்காமல் இருந்து வந்துள்ளார். ஆரம்பத்தில் ஆனந்த் குடி போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்துள்ளதாக தெரிகிறது. சமீப காலமாக கஞ்சா போதைக்கும் அடிமையாகி உள்ளார். இதையடுத்து, போதைப் பழக்கத்தை கைவிடுமாறு மகனிடம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார் தந்தை சேகர். இதற்கிடையே, ஆனந்த் வேலைக்கு செல்லாமலும் அண்ணன் கொண்டுவரும் பணம் மற்றும் தந்தை சம்பாதிக்கும் பணம் ஆகியவற்றை எடுத்து ஜாலியாக செலவு செய்தும் வந்துள்ளார். இதனால், குடும்பத்தில் அடிக்கடி சண்டை நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அண்ணனுடன் சென்னை தாம்பரம் சேனிடோர் பகுதியில் உள்ள வாட்டர் வாஷ் கம்பெனிக்கு தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் சென்றுள்ளார். இதையடுத்து நேற்று நள்ளிரவு வீடு திரும்பிய ஆனந்த், முழு குடிபோதையில் வந்துள்ளார். இதனை தந்தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சேகர் தந்தையை கண்முன் தெரியாமல் திட்டியது மட்டுமின்றி, தாக்கவும் செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை சேகர், வேறு வழியின்றி மகன் அடிப்பதற்கு பயன்படுத்திய கட்டையை பிடுங்கி தந்தை கடுமையாக அடித்துள்ளார்.
தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் ஆனந்துக்கு அடிபட்டதை தொடர்ந்து, ரத்த வெள்ளத்தில் ஆனந்த் சரிந்து விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஆனந்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தந்தை சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.