இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களுக்கு குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுத்த அதானி குழுமம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியிட்ட பின்பு அதிகளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்து நிற்கிறது. இந்த நிலையில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை வெளியிட்டது, இந்த அறிக்கையில் இந்நிறுவன தலைவரும், நிறுவனருமான கெளதம் அதானி அமெரிக்காவைச் சேர்ந்த ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிப்பதற்காக திட்டமிட்டு செய்த வேலை என்று தெரிவித்தார்.
ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் தனது நிறுவனங்களின் பங்கு விலை மற்றும் நிறுவனத்தின் சந்தை மதிப்பை உயர்த்த தனது சொந்த பணக்தை வைத்தே வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலம் இக்குழுமத்தின் பங்கு விலையை கையாளுதல் மற்றும் கணக்கியல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது. கௌதம் அதானி, அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் அறிக்கையில் ஹிண்டன்பர்க் அறிக்கையில் தவறான தகவல் மற்றும் பழைய, மதிப்பற்ற குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு உள்ளது. இது அதானி குழுமத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கவும், எங்கள் நிறுவனங்ககளின் பங்குகளின் விலைகளை வேண்டுமென்றே குறைப்பதன் மூலம் லாபத்தை ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு இந்த சதி வேலை செய்யப்பட்டு உள்ளதாக கௌதம் அதானி தெரிவித்தார்.