பொதுவாக கோயில்கள் என்றாலே பல நம்பிக்கைகளும், வேண்டுதல்களும் இருக்கும் இடமாகவே உள்ளது. கோயிலுக்கு சென்றால் இந்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பல மக்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் கோயம்புத்தூரில் பொள்ளாச்சியில் ஆனைமலை என்ற பகுதி உள்ளது. இங்கு அமைந்துள்ளது தான் சிறப்பு வாய்ந்த மாசாணி அம்மன் திருக்கோயில்.
இந்த திருக்கோயிலும் திருக்கோயிலில் இருக்கும் அம்மனும் மயான மண்ணில் அமைந்துள்ளதால் இக்கோயிலுக்கு மாசாணி அம்மன் என்று பெயர் வந்துள்ளது. இக்கோயில் அமைந்த வரலாற்று கதை என்னவெனில் ராஜாக்கள் ஆண்ட காலத்தில் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண் அங்கிருந்த ராஜாவுக்கு சொந்தமான மாமரத்தில் உள்ள மாம்பழத்தை தின்றுவிட்டாராம். இதை அறிந்த ராஜா எதையும் விசாரிக்காமல் பெண்ணின் தலையை வெட்ட சொல்லி உத்தரவிட்டார். அப்பெண் இறப்பதற்கு முன்பாக ராஜாவிற்கு சாபம் அளித்துள்ளார். மேலும் நீதி கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு, ஏமாற்றப் பட்டவர்களுக்கும் கடவுளாக நான் துணை நிற்பேன் என்று கூறிவிட்டு உயிரிழந்துள்ளார். அப்பெண் தான் மாசாணி அம்மனாக இன்று வரை பக்தர்களுக்கு துணையாக இருந்து வருகிறார்.
இதன் காரணமாகவே மாசாணி அம்மன் திருக்கோயிலில் மற்ற எந்த கோயில்களிலும் இல்லாதது போல் அம்மன் படுத்திருப்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டது. 17 அடி நீளம் கொண்டு மேற்கில் தலை வைத்து கிழக்கில் கால் நீட்டி அம்மன் படுத்திருப்பது பக்தர்களை ஆச்சரியப்படுத்துகிறது. இக்கோயிலின் வரலாற்று கதையினாலயே தோன்றிய காலத்தில் இருந்து தற்போது வரை வித்தியாசமான வேண்டுதல் ஒன்று இருந்து வருகிறது.
அதாவது மாசாணி அம்மன் கோயிலில் 2அடி உயரத்திற்கு அம்மன் சிலை ஒன்று உள்ளது. அந்த சிலைக்கு மிளகாய் அரைத்து பூசி பக்தர்கள் வேண்டி வருகின்றனர். ஏமாற்றத்திற்கு உள்ளானவர்கள், நீதி கிடைக்காமல் வஞ்சிக்கப்பட்டவர்கள் அம்மனை முறையிட்டு இந்த வேண்டுதல் செய்து வந்தால் கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.