பொதுவாக மாநிலமாக இருந்தாலும் சரி, அல்லது தேசிய அளவில் இருந்தாலும் சரி மிக பிரபலமான கோவில் திருவிழா அல்லது மிக பிரபலமான நிகழ்வு என்று அந்த பகுதி மக்கள் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபடும் வகையிலான ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்றால், அந்த விழாவிற்கு மதிப்பளித்து அந்தப் பகுதிகளில் உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நாகை மாவட்டத்தில் இருக்கின்ற சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. ஆகவே இதனை காண்பதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏராளமானோர் இந்த கோவிலுக்கு வருவார்கள். இந்த நிலையில் தான் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இருக்கின்ற பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை வழங்கி நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாகை நகரில் இருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கே 20கிலோ மீட்டர் தூரத்திலும், கீழ்வேளூர் பகுதியில் இருந்து கிழக்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த சிக்கல் சிங்காரவேலர் முருகன் கோவில் இருக்கிறது.