2019 ஆம் ஆண்டில், மனிதகுல வரலாற்றிலேயே மிக மோசமான வைரஸின் தோற்றத்தை உலகம் கண்டது. சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பரவியதால் கோடிக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
நிமோனியாவின் அறிகுறிகளை ஒத்த கடுமையான சுவாச நோய்களை உண்டாக்கும் திறனுடன் கட்டுக்கடங்காமல் பரவிய கோவிட் 19 வைரஸை உலக சுகாதார அமைப்பு பெருந்தொற்றுநோயாக அறிவித்தது.
கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட உலகம் முழுவதுமே முடங்கியது. இதனால் ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன.
இந்த நிலையில் சீனாவில் COVID போன்ற ஒத்த அறிகுறிகளுடன் மற்றொரு கொடிய வைரஸ் பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் அடுத்த பெருந்தொற்றாக மாறி சுகாதார நெருக்கடியை ஏற்படுத்துமா என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.
மனித மெட்டாப்நியூமோவைரஸ் என்று அழைக்கப்படும் HMPV என்ற கொடிய வைரஸ் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சீன மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு விரைவில் லாக்டவுன் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வைரஸ் 2001 ஆம் ஆண்டில் டச்சு ஆராய்ச்சியாளர்களால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது. இந்த வைரஸ் பல ஆண்டுகளாக மனிதர்களுக்கு பரவி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. HMPV வைரஸ் நியூமோவிரிடே குடும்பத்தைச் சேர்ந்தது, இதில் சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) போன்ற பிற சுவாச நோய்க்கிருமிகளும் அடங்கும்.
HMPV பரவலால் மற்றொரு லாக்டவுன் இருக்குமா?
இந்த புதிய வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் மற்றொரு லாக்டவுனை நோக்கி செல்கிறோமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் அதிகாரி டாக்டர் அதுல் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் சீனாவில் HMPV பரவுவது குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் “சீனாவில் HMPV வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . இந்த வைரஸ் மற்ற சுவாச வைரஸ் போன்றது, இது சளியை ஏற்படுத்துகிறது, மேலும் வயதானவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு இது காய்ச்சலை ஏற்படுத்தும்.” என்று தெரிவித்தார்.
சீனாவில் பரவும் HMPV வைரஸ் காரணமாக இந்தியா எந்த லாக்டவுனையும் திட்டமிடவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வைரஸை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வைரஸ் தொற்றை சமாளிக்க தயாராக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
HMPV வைரஸ்: யாருக்கு ஆபத்து?
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் HMPV வைரஸை சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் சுவாச வைரஸ் என வகைப்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் முக்கியமாக அனைத்து வயதினரையும் பாதிக்கிறது. எனினும் சிறு குழந்தைகள், முதியவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.
தற்போது, HMPV நோய் பாதிப்புக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ இல்லை. எனினும் கைகளை அடிக்கடி கழுவுதல், நெரிசலான இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நோயை தடுக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read More : சீனாவில் HMPV பரவல்.. 2025-ல் மற்றொரு பெருந்தொற்று என அன்றே கணித்த இந்திய ஜோதிடர்.. வைரலாகும் பதிவு..!