கன மழை பெய்த விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் நிலையில், அப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது. வட தமிழக மாவட்டங்களில் கனமழை பதிவான நிலையில், இன்று வரை சில இடங்களில் வெள்ளம் வடியாததாலும், பள்ளிகளில் நிவாரண முகாம்கள் செயல்படுவதாலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளும், மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விடுமுறைக்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ளார். அதேபோல கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தின் 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி, அண்ணாகிராமம், கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை, நிவாரண முகாம்களாக செயல்படும் 22 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.